சென்னையில் “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மறைந்த பின்னணி பாடாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் சரண் சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சரின் தனி பிரிவுக்கு மனு ஒன்றினை அளித்திருந்தார். அதில் சென்னையில் எஸ்.பி.பி. வசித்த காம்தார் நகரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் என்று பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை வைத்திருந்தார். 

 தமிழக முதல்வரின் கவனத்திற்கு இது குறித்த தகவல் சென்றதும், முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அன்பிற்குரியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.

 காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர். அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும்” என்று தெரிவித்துள்ளார். பின்னணி பாடகர் எஸ்.பி.பி.பெயர் சாலைக்கு வைக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

Leave a comment