தமிழ்நாட்டின் விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக உழைத்தவர் பெரியார் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, வாழ்வில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் விளையாட்டு போட்டிகளில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, துவண்டு போகாத மன உறுதி, பகுத்தறிய வேண்டிய ஆராய்ச்சி மனப்பான்மை மிக மிக அவசியம். பெரியார் உடலால் மறைந்தாலும் அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் அழியாது. 95 வரை வாழ்ந்த பெரியார் இறுதி வரைக்கும் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக உழைத்தவர்.
பகுத்தறிவு சமூகநீதி சுயமரியாதை கொள்கைகளை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தார்கள். அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் இளமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.குறிப்பாக மகளிர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் பொது இடத்தில் சிரித்தால் கூட தப்பு என்றும் கூறினார்கள். இன்றைக்கு அந்த நிலைமை மாறியுள்ளது. எல்லோரும் படிக்கிறார்கள். எல்லோரும் வேலைக்கு செல்கிறார்கள்.
சுயமரியாதை திருமணம் செல்லும் என அண்ணா சட்டம் கொண்டு வந்தார். மகளிர் குடும்ப சொத்தில் சம உரிமை உண்டு என கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். காவல்துறை ராணுவத்தில் பெண்கள் வரவேண்டும் என பெரியார் சொன்னார்.இந்தியாவிலேயே முதல்முறையாக 50 வருடத்திற்கு முன்னாடியே தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணியாற்றலாம் என்கிற நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர் தான். இன்றைக்கு பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும். என்ற எண்ணத்தோடு புதுமைப்பெண் திட்டத்தை நம் முதலமைச்சர் தந்துள்ளார்.
உங்களில் பல பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வருகிறது. வறுமை காரணமாக கல்வியை விட்டு விடக்கூடாது என தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். சுயமரியாதையோடு வாழ வேண்டும். அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்று பெரியார் போராடினார்.
அதற்கு செயல் வடிவம் கொடுக்கிற விதமாக இந்தியாவிலேயே முதல் முறையாக தான் மகளிர் சுய உதவி குழுக்களை கலைஞர் தொடங்கினார். மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்திட நம்முடைய முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கொண்டு வந்தார். எல்லோரும் நல்ல வேலைக்கு போக வேண்டும் என்ற பெரியாரின் கனவை நினைவாக்க நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதி மாதிரியான உயர் பதவிகளுக்கு ஏழை எளிய கிராம பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வரவேண்டும் என வாழ்நாள் முழுக்க போராடியவர் தந்தை பெரியார்.
அதனை செயல்படுத்தும் விதமாக நம்முடைய முதலமைச்சர் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகிற மாணவர்கள் இளைஞர்களுக்கு மாதம் ரூ.7,500 நிதி உதவி வழங்குகிறார். அது மட்டுமல்லாமல் முதல் நிலை தேர்வில் வென்றால் 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற நிலையை ஏற்படுத்த பெரியார் இறுதிவரை போராடினார். அது முடியாமல் போனபோது பெரியாரின் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஏன் பெண்களும் அர்ச்சகராக பணியாற்றலாம் என்கிற நிலையை நம் முதலமைச்சர் ஏற்படுத்தினார்.
பெரியார் இல்லாமல் நாம் யாரும் இல்லை என்று அறிஞர் அண்ணா சொன்னார். என்னை எத்தனையோ பெயர்களை சொல்லி புகழ்ந்தாலும் பெரியார் வழியை பின்பற்றும் மானமிகு சுயமரியாதைக்காரன் என்று சொல்லும்போது பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றார் கலைஞர். பெரியார் இறந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவருடைய கருத்துக்களும் சிந்தனைகளும் இன்றைக்கு சமகாலத்தில் ஒத்துப்போகும் அளவிற்கு உள்ளது. அது என்றைக்கும் இருக்கும் ஆகவே தான் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம் என்று அமைச்சர் பேசினார்.


Leave a comment