திருப்பதி கோவிலின் புனித தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : சந்திரபாபு நாயுடு ஆவேசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலகப்புகழ் பெற்றது. திருப்பதி என்றால் லட்டு என்ற அளவிற்கு உலகில் உள்ள அனைவராலும் சொல்லப்படும் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படும் நெயில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். இதனால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழுமலையானின் பக்தர்கள் வேதனை அடைந்தனர். ஏழுமலையான் கோவிலின் புனிதத் தன்மையை கெடுத்து விட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் விஜயவாடாவில் உள்ள தலைமைச் செயலகம் அருகே அண்ணா கேண்டினை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் பிரசாதம் தயாரிப்பில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செயல் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத் தன்மைக்கு கேடு விளைவிப்பதாகும். கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வரம்பு மீறிய தவறுகளை செய்துள்ளனர். அவர்களின் பேராசைக்கு ஏழுமலையான் சாமியும் விதிவிலக்கல்ல என தெரிய வந்துள்ளது. திருப்பதி கோவிலின் புனித தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Leave a comment