வடக்கே கர்ணனாகவும், தமிழகத்திற்கு கும்பகர்ணாகவும் இருக்கிறீர்கள் : கமல்ஹாசன் ஆவேசம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில்  தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், காந்தியை நாம் இறக்கை வைத்த ஒரு தேவதையாக பார்க்க வேண்டும். காந்தி போன்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவரைப்போன்ற வீரம் மற்றவரிடம் உள்ளதா என நான் என்னைப் பார்த்து கேட்டுக் கொண்டேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் எனக் கூறினார்கள். மக்களை நான் நேரடியாக எனது 4 வயது முதல் பார்த்து வருகிறேன். தோற்ற அரசியல்வாதி நான் தான். தோற்பது என்பது நிரந்தரம் அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று அறிவித்திருந்தால், இந்நேரம் இந்தியா என்னவாக இருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தான பேச்சு. அது தவறு என்பது உலக அரசியலுக்கு தெரியும்.

இன்று நாட்டை நடத்திக் கொண்டிருப்பது நம்முடைய பணம். அதைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அங்கு நிதியை அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு, அங்கு கர்ணனாகவும், இங்கு கும்பகர்ணாகவும் இருக்கிறீர்கள். 2026 தேர்தலை நோக்கி செல்ல வேண்டும், என்பதை எனது அன்பு கட்டளையாக எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு வித்தியாசமான விவசாயம். இதில் பொறுமை வேண்டும். தினம்தோறும் அதனைத் தோண்டி பார்க்க கூடாது. என்னைக் கேட்டார்கள் என்ன திரும்பவும் சினிமாவிற்கு போய்விட்டார் என்று, பின்ன என்ன நான் கோட்டைக்கு சென்று கஜானா திறக்கவா? என கேட்டேன். ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. அதனால் தான் சினிமா செல்கிறேன். எனக்கு மிகப்பெரிய இடைஞ்சல்கள் கொடுத்தவர்கள் எல்லாம் நான் பார்த்து வளர்ந்துள்ளேன். நம்மை நாட்டை விட்டு துரத்தி விடுவார்கள் என நினைத்தவர்கள் எல்லாம் அவர்களைப் பார்த்து நான் வளர்ந்துள்ளேன் அவருடன் நன்றாக பழகி உள்ளேன். நாளை நமதாக வேண்டும். அதனை கட்டுவித்த சிற்பியாக நாம் மாற வேண்டும். அதற்கான வேலையை நாம் செய்ய வேண்டும். செய்யுங்கள் நாளை நமதே என்று பேசினார்.


 

 

Leave a comment